புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்ப்பது ஏன்? ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகி விளக்கம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமான பி.கே.இளமாறன் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம், தர ஊதியம் (கிரேடு பே), அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்குச் சமமான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்துகிறது.

இதற்காக, ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஜி.பி.எப். (பொது வருங்கால வைப்பு நிதி) எனப்படும் பிரத்யேக எண் அளிக்கப்பட்டு அந்தக் கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு ஜி.பி.எப். கணக்கில் சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும், மீதம் உள்ள 40 சதவீதத் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 4½ லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை 3 ஆயிரத்து 256 பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த சிலருக்கு மட்டுமே 60 சதவீத பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாருக்கும் 60 சதவீத பணமும் திரும்ப வழங்கப்படவில்லை. ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து 18 ஆயிரம் கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தப்பணம் எந்த கணக்கில் உள்ளது என்ற விவரத்தையும் அரசு தெரிவிக்கவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிபுரிந்த மொத்த காலத்தையும், அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படும். ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அவருக்கு முழு ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது அவர் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீத தொகை ஓய்வூதியமாக கிடைக்கும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர், ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.

விருப்பப்படுபவர்கள் இதைவிட கூடுதலாகவும் செலுத்தலாம். அந்த தொகைக்கு அரசு நிர்ணயித்துள்ள வட்டி வழங்கப்படும். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை ஓய்வு பெறும்போது முழுவதுமாக திரும்ப வழங்கப்படும். இதுதவிர ஓய்வூதியமும் வழங்கப்படும்.

இதுமட்டுமல்லாமல் பணி வரன்முறைக்கு பின்னர் 2 ஆண்டுகள் பணி முடித்த ஒருவர் தான் செலுத்திய பணத்தில் இருந்து 60 சதவீத பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த பணத்தை 30 மாதத்துக்குள் திரும்ப செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் தனது பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து 60 சதவீத தொகையை திரும்ப பெற முடியும்.

இதுபோன்று 15 ஆண்டுகள் வரை பணத்தை பெற முடியும். 15 ஆண்டுகள் பணி முடித்த ஒருவர் 6 மாதத்துக்கு ஒரு முறை தான் செலுத்திய பணத்தில் 75 முதல் 90 சதவீத பணத்தை பெற முடியும். அவ்வாறு பெறும் பணத்தை திரும்ப செலுத்த வேண்டியதில்லை.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருவர் மாதம் 3 ஆயிரத்து 300 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார் என்றால் அதே நபர் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்தால் 20 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியமாக பெற முடியும். புதிய ஓய்வூதிய திட்டத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் தான் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top