மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் கடந்த 2008–ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டன. அதையடுத்து அமைக்கப்பட்ட 7–வது சம்பள கமிஷன், தனது சிபாரிசுகளை கடந்த ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
தனியார் துறை மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணிக்கொடை (கிராஜுவிட்டி) உச்சவரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த சம்பள கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் பணிக்கொடை சட்டத்திருத்த மசோதா தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பணிக்கொடை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தொழிலாளர்கள் ஓய்வு பெற்றபின், ரூ.20 லட்சம் வரை வரிப்பிடித்தம் இல்லாமல் பணிக்கொடை பெறமுடியும்.