மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, ‘கட்’

‘விடுமுறை பயண சலுகை திட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, தினசரி படி வழங்கப்படாது’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கு, எல்.டி.சி., எனப்படும், விடுமுறை பயணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிந்துரை : இதன்படி, ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு தரப்படுகிறது.
ரயில் டிக்கெட் செலவுத் தொகை, திரும்ப வழங்கப்படுகிறது. இந்நிலையில், விடுமுறை பயண திட்டம் தொடர்பாக, ஏழாவது ஊதிய கமிஷன் சில பரிந்துரைகளை செய்தது. அதை ஏற்று, மத்திய அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, புதிய உத்தரவை பிறப்பித்துஉள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை பயண திட்டத்தில், தினசரி படி வழங்கப்படாது. தற்செயலான செலவு மற்றும், உள்ளூர் பயண செலவு ஆகியவற்றுக்கான தொகை திரும்ப வழங்கப்படாது. ‘சுவிதா’ ரயில் பயண செலவினங்களும், ‘தட்கல்’ பதிவு டிக்கெட் கட்டணங்களும் அனுமதிக்கப்படும்; பயண நோக்கத்தை பொறுத்து, செலவினம் திருப்பித் தரப்படும்.

ஜூலை முதல் அமல் : மத்திய, மாநில அரசுகள், அரசு சார் நிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்களில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அத்தகைய வசதி இல்லாத இடங்களுக்கு பயணித்தால், முதல், ௧௦௦ கி.மீ.,க்கான செலவுத் தொகை மட்டும் திரும்பத் தரப்படும். இந்த புதிய விதிகள், இந்தாண்டு, ஜூலை முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top