21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகை : அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

“21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுளளது.

மதுரையில் சங்க மாநில தலைவர் உ.மா.செல்வராஜ் கூறியதாவது:
சம்பளக்குழு முடிவுகள் 12 லட்சம் அரசு பணியாளர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஏமாற்றம் தருகிறது. மூன்று மாத போராட்டங்களுக்கு பின் அரசு, ஜாக்டோ ஜியோ கிராப் கூட்டமைப்பிடம் பேசி ஒப்புக் கொண்டபடி சம்பளக்குழு அறிக்கையை பெற்று அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது.

மத்திய அரசு, ஏழாவது சம்பளக்குழுவில் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அமல்படுத்தியது. மாநில அரசு 15 ஆயிரத்து 700 ரூபாய் என நிர்ணயம் செய்தது ஏமாற்றமளிக்கிறது.
குறைந்த பட்சம் சம்பளம் 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க, வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் இளநிலை உதவியாளர்கள் சம்பளம் வழங்காதது ஏமாற்றத்தை தருகிறது.

தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு 30 சதவீத சம்பள உயர்வும் ஏமாற்றம் தருகிறது. அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையில் பணிபுரியும் மூன்று லட்சம் பேரில் ஐந்தாண்டுகள் பணி முடித்தவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.

ஊராட்சி செயலர், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர், கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதியத்தை ஐயாயிரம் ரூபாயாக உயர்த்த முதல்வர் பழனிசாமி முன்வர வேண்டும். தமிழகத்தில் ஒரு கோடி பேர் படித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அரசு துறையில் நிரந்தர பணியிடங்களை குறைக்க, பணியாளர் சீராய்வுக்குழுவை அரசு அமைத்துள்ளது. இது நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவையின்படி தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளில் பணி நியமனம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு பணியாளர்கள் 1.1.2016 முதல் சம்பள மாற்றப்பயனை அனுபவித்து வரும் நிலையில் தமிழக அரசு 21 மாத நிலுவை தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.
அதை உடனடியாக வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும். இதுகுறித்து சென்னையில் அக்., 21ல் அரசு பணியாளர் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வர், என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top