110 விதியின் கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி!

சட்டப்பேரவைக் கூட்டத்தில், 110-ம் விதியின்கீழ் எரிசக்தித்துறை, சமூகநலத்துறை, தொழில்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றில், பல்வேறு புதிய திட்டங்களை இன்று அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டங்களை அறிவித்தார். எரிசக்தித்துறையில், அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள கணக்கீட்டின்படி
100 யூனிட் வரையிலான மின்சாரம், கட்டணம் இன்றி தொடர்ந்து வழங்கப்படும்.

மேலும், சென்னை பெருநகரின் மின் கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக, கூடுதலாக 31 புதிய துணை மின் நிலையங்கள், இயக்கத்தில் உள்ள 314 உயரழுத்த மின்மாற்றிகளைத் திறன் உயர்த்தும் பணிகள், புதிய 33/11 கிலோ வோல்ட் மின்னூட்டிகள் நிறுவும் பணிகள் மற்றும் இயக்கத்தில் உள்ள 33/11 கிலோ வோல்ட் மின்னூட்டிகளை வலுப்படுத்தும் பணிகள் ஆகியன 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறையைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே மஹாராஷ்ட்ராவை அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி 10 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 20 ஆயிரம் நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், நடைமுறையில் உள்ள 3 சதவிகித இடஒதுக்கீட்டினை, 4 சதவிகிதமாகத் தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இந்த 4 சதவிகித இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top