வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, வெளி மாநிலத்தவரும் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கை கூறுகிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்படுவதாவது: – வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது.

தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப்பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான 14.11.2017 நாளிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்து வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.கடந்த மூன்றாண்டுகளில் 56 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்றுள்ளார்கள். இவற்றுள் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top