வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை

‘பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்’ என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை, சில தினங்களில் தீவிரம் அடையும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில், பருவ மழையால் எந்த விபத்தும், பள்ளி வளாகங்களில் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

அதன் விபரம்: அனைத்து பள்ளிகளிலும், கட்டடத்தின் உறுதியை சோதித்து கொள்ள வேண்டும். மழைநீர் ஒழுகும் கட்டடங்களை தவிர்க்க வேண்டும். பாழடைந்த கட்டடங்களை, அனுமதி பெற்று இடிக்க வேண்டும். மின் உபகரணங்களை ஆய்வு செய்து, மின் கசிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும். கீழே விழும் நிலையில், மரங்கள் இருந்தால், அவற்றை அகற்ற வேண்டும். பள்ளியில், அவசர தேவைக்கு, முதலுதவி மருந்துகள் வைத்திருப்பது அவசியம்.

பள்ளி அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்றவற்றின் தொலைபேசி எண்களை, பள்ளி வளாகத்தில் எழுதி வைக்க வேண்டும்.

நீர்நிலைகளின் அருகில் செல்லவோ, அவற்றில் குளிக்கவோ கூடாது என, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top