முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு இன்னும் 2 நாட்களில்… இதோ உங்களுக்கான டிப்ஸ்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் உங்கள் அனைவருக்கும் எளிய டிப்ஸ் இதோ

1663 முதுகலைபட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 2ந் தேதி நடைபெறும். இந்த தேர்விற்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வு 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முக்கிய பாடத்தில் இருந்து 110 கேள்விகளும், கல்வி பயிற்று முறையில் இருந்து 30 கேள்விகளும், பொது அறிவில் இருந்து 10 கேள்விகளும் என்று மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும்.

1. தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் நீங்கள் கடைசி இரண்டு நாட்களில் புதிதாக எதையும் படிக்காதீர்கள். இதுவரை படித்தவற்றை திரும்ப ஞாகப்படுத்திக் கொள்ள மட்டும் செய்யுங்கள்.

2. ஒரு சிலர் கடைசி இரண்டு நாட்கள் மட்டும்தான் படிப்பார்கள். நீங்க எப்படி? படித்துவிட்டீர்களா? அல்லது இனிதான் படிக்கனுமா? கடைசி நாட்களில் புதிதாக படிப்பவர்கள் முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களை படிப்பது நல்லது.

3. கடைசி இரண்டு நாளாவது படிக்குமே என நினைப்பவர்கள் ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதில் எவ்வளவு படிக்க முடியுமோ அதைப்படிக்கலாம் என நினைக்காதீர்கள். முடிந்த அளவிற்கு மாதிரி வினாத்தாள்களை மட்டுமே கடைசி நாட்களில் படிப்பது நல்லது.

4. மாதிரி வினாத்தாளில் எல்லாப் பாடங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகளும் இருக்கும். அதனால் மாதிரி வினாத்தாள்களை நன்றாக படியுங்கள். படிப்பதை தெளிவாகப் படியுங்கள். மனதில் நிலைத்து இருக்கும் படி அனுதின நடைமுறை சம்பவங்களோடு இணைத்து படியுங்கள்.

5. முறையாக டிஆர்பி தேர்விற்கு தயாராகி வருபவர்கள். கடைசி இரண்டு நாட்களில் படித்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். புதிதாக எதையும் படிக்காதீர்கள். மாதிரி வினாத்தாள்களை வைத்துப் படித்து உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

6. தேர்வு நெருங்க நெருங்க தேவையில்லாத பயம் வரும். அந்த பயத்தை முதலில் துரத்துங்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

7. நாளைக்கு தேர்வு என்றால் பெரும்பாலானோர் செய்யும் பெரிய தவறு முந்தைய நாள் ரொம்ப நேரம் கண்விழித்து படிப்பதுதான். தயவு செய்து அந்த தவற்றை நீங்கள் செய்யாதீர்கள். தேர்வுக்கு முந்தைய நாள் போதுமான அளவிற்கு தூங்கி எழுந்து செல்லும் போதுதான் உடலும், மூளையும் தெளிவாக இருக்கும்.

8. தேர்வு நாள் அன்று தேர்வறைக்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள். காலை உணவைக் கட்டாயம் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள்.

9. தேர்வு எழுதும் போது படித்தவற்றை நிதானமாகச் சிந்தித்து விடையளிக்க வேண்டும். பதட்டம் இல்லாமல் நிதானமாகச் சிந்திக்கும் போது உங்களுக்கு படித்தவைகள் எளிதில் நினைவுக்கு வரும். பதறிய காரியம் சிதறும். பதறாமல் நிதனமாக தேர்வில் செயல்படுவது அவசியம்.

10. ஒரு வினாவிற்கான விடை நினைவில் வராமல் போனால் அதையே நினைத்துக் கொண்டு அதனுடனே போராடிக் கொண்டிருக்கக் கூடாது. அந்த நேரத்தில் அதைவிட்டு விட்டு மற்ற விடைகளை எழுத வேண்டும். கடைசியாக அந்த கேள்விக்கு யோசித்து விடையளிக்க வேண்டும்

தேர்வு என்பது நம் வாழ்வில் நாம் அடுத்த நிலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாகும். தேர்ந்தெடுக்கப்படும் வரை முயற்சியை கைவிடக்கூடாது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top