மாணவர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி : தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்

மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க, தமிழக அரசு மற்றும், ‘ஸ்பீடு’ நிறுவனத்திற்கிடையே, நேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் முன்னிலையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், ‘ஸ்பீடு’ நிறுவனம் மேலாண் இயக்குனர், விநாயக் செந்தில் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கொள்கை முடிவு : பின், செங்கோட்டையன் கூறியதாவது: ‘நீட்’ தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்பது, அரசின் கொள்கை முடிவு. எனினும், தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, போட்டித் தேர்வுகளை சந்திக்க, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். ‘ஸ்பீடு’ நிறுவன நிர்வாகிகள், இலவசமாக பயிற்சி அளிக்க முன்வந்தனர்.

இந்நிறுவனத்தினர், ஆங்கிலம் மற்றும் தமிழில், பயிற்சி வகுப்பு நடத்த உள்ளனர். முதலில், 100 மையங்களில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும். ஜனவரியில், 412 மையங்களில் பயிற்சி அளிக்கப் படும். ஒரு மையத்தில் இருந்து, அதை சுற்றி உள்ள பள்ளி மாணவர்களுக்கு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். அதேபோல், சிறந்த ஆசிரியர்களை, பாடவாரியாக தேர்வு செய்து, அவர்களுக்கு, போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது எப்படி என, பயிற்சி அளிக்க உள்ளோம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மையங்களில், அவர்களுக்கு நான்கைந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

முதல்வருடன் கலந்தாலோசித்து, பயிற்சி வகுப்பு துவங்கும் தேதி அறிவிக்கப்படும். இது தவிர, 3,000 ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் துவங்க உள்ளோம். பயிற்சி வகுப்பில் சேர, இதுவரை, 13 ஆயிரத்து 740 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவகாசம் : இந்த மாதம் இறுதி வரை, அவகாசம் வழங்கப்படும். குறைந்தபட்சம், 20 ஆயிரம் மாணவர்கள் இடம் பெறுவர். பயிற்சி நேரம் பற்றிய அட்டவணை, விரைவில் ெவளியிடப்படும்.
ஸ்பீடு நிறுவனத்துடன், மூன்று ஆண்டு பயிற்சி அளிக்க, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரே மையத்தில் இருந்து, செயற்கைக்கோள் வழியே, அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, தனி அடையாள அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

கையேடு வெளியீடு : அரசுப் பள்ளி மாணவ – மாணவியரை, போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய, ‘ஸ்பீடு’ நிறுவனம், வினா – விடை அடங்கிய புத்தகத்தை தயார் செய்துள்ளது. மொத்தம், 30 புத்தகங்கள், தயார் செய்யப்பட உள்ளன. முதல் புத்தகத்தை, அமைச்சர், செங்கோட்டையன் ெவளியிட்டார். மாணவ – மாணவியருக்கு, இலவசமாக வழங்கப் படும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top