மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து, உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களுக்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு முடித்துவிட்டு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., போன்ற படிப்புகளுக்கும், பிளஸ் 2 முடித்துவிட்டு, பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கும் செல்வோர்எண்ணிக்கை, அகில இந்திய அளவில் ஒப்பிடும் போது, அதிக அளவில் உள்ளது.ஆனாலும், 60 சதவிகித மாணவர்கள் பள்ளி படிப்போடு நின்று விடுகின்றனர். இவர்களுக்கு தொழில் திறன் அதிகரிக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில்கள் சார்ந்து, திறன் பயிற்சிகளை அளிக்கும் வகையில், இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள பயிற்சிகளில், மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பயிற்சியினை தேர்வு செய்து கொள்ளலாம். மூன்று மாதம் முதல், ஆறு மாதம் வரை, குறுகிய கால பயிற்சி வழங்கப்பட்டு, சுய தொழில் செய்ய ஊக்கப்படுத்தப்படுகின்றன.இப்பயிற்சிகளில் சேர்வதற்கான விபரங்களை, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தகவல் பலகையில் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், உயர்கல்வி தொடர இயலாத மாணவர்களை, திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் சேர அறிவுறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பயிற்சி விபரங்கள் குறித்து, அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top