மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு… நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில், மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை அரசு எதிர்த்து வந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது. அதன்படி நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க சட்டம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு, அதை ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த சட்டம் ஒப்புதலுக்காக மத்திய அரசால் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இதன் காரணமாக தமிழகம் உட்பட நாடுமுழுவதும் நீட் தேர்வுகள் நடந்து, நேற்று முடிவுகளும் வெளியானது. இதில், தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் 90 சதவிகிதம் பேர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் ஆவர். மீதமுள்ள 10 சதவிகிதம் பேர் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவின் கீழ் பயின்றவர்கள்.

இந்நிலையில், நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இது மாணவர்கள், கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வு முடிவுகளில் மாநில அளவிலான ரேங்கிங் வெளியிடப்படாது என்பதால், மாநில அளவில் யார் முதலிடம் பிடித்தார்கள், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி விகிதம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

நீட் தேர்வு சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவை மையப்படுத்தி நடந்தது என்பதால், தமிழகத்தில் பெரும்பாலும் சி.பி.எஸ்.சி. பாடப்பிரிவில் பயின்றவர்களே மருத்துவ பாடத்தைப் பயில முடியும் என்ற சூழல் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1150 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்கள் பலர் நீட் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களையே எடுத்துள்ளனர். இதனால், மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் பலருக்கு, மருத்துவக் கல்வி என்பது எட்டாக்கனியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடை தவிர்த்த இடங்களில், 85 சதவிகிதம் இடங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவிகிதம் இடங்கள் மட்டுமே சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

ஓரிரு நாளில் விண்ணப்ப வினியோகம் துவங்கும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பு ஓரளவு ஆறுதலைத் தரக்கூடும் என நம்பப்படுகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை ஏற்கெனவே குஜராத் மாநிலம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ பாடச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்’ என தமிழக அரசு ஏற்கெனவே சட்டம் நிறைவேற்றியுள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு அனுமதி பெற தொடர்ச்சியாக முயற்சிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செல்லாததாகிவிடும். தற்போதைய சூழலில் நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது என்பதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில், தற்போது மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி அரசு அறிவிக்கும்போது அதற்கு எதிராகவும் சிலர் நீதிமன்றத்தை நாட வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. மருத்துவ கல்விக்கான சேர்க்கை என்பது இந்த முறை மிகுந்த குழப்பத்துக்குள்ளாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top