போராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்!!!

தமிழக அரசு ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, எட்டாவது ஊதியக் குழு மாற்றத்தை அமல்படுத்துவது என 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 7 முதல், 15 வரையில் தொடர் போராட்டம் செய்தார்கள்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர். நீதிமன்றத்தின் கண்டிப்பால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியவர்கள், உயர் நீதிமன்றத்தை (மதுரைக் கிளை) நாடினார்கள். நீதிபதிகள் சுதாகரன், சாமிநாதன் இருவர் கொண்டபெஞ்சு, மதுரை நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதி மன்றத்துக்கு வழக்கை மாற்றியது. அக்டோபர் 23ஆம் தேதி, தலைமைச் செயலாளர் ஆஜராகி ஜிபிஎஃப் சம்பந்தமான அறிவிப்புகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளார்கள்.

இந்நிலையில், மத்திய அரசு பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியம் ரூ18 ஆயிரம் வழங்காமல் ரூ15,700 என்றும், பென்ஷன் ரூ 9 ஆயிரத்திற்கு பதில் ரூ. 7500 எனவும் அறிவித்து ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது தமிழக அரசு என்கிறார் அரசு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதி பாலு.

அக்டோபர் 23ஆம் தேதி வழக்கு இருப்பதால், அன்று தலைமைச் செயலாளர் சரியாக அறிவிப்புகள் தாக்கல் செய்யவில்லையென்றால், அக்டோபர் 24ஆம் தேதி, அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க ஜாக்டோ ஜியோவினர் அவசரமாகக் கூடுகிறார்கள்.

“தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 13 லட்சம்பேர் இருக்கிறார்கள், 2006 ஜனவரி 1ஆம் தேதி ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. இந்த முரண்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு சண்முகம், உமாநாத் இருவர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு. அந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு கண்டுகொள்ளவில்லை. முதலில் அதைச் சரிசெய்ய வேண்டும். இந்த மாதம் 23ஆம் தேதி வழக்கிருப்பதால், தற்போது அறிவித்துள்ள ஏமாற்று ஊதியக் குழுவைப் பற்றி அரசு ஊழியர்களுக்கு விளக்குவதற்கு வரும் 20ஆம் தேதி மாநிலம் முழுவதும், மாவட்ட தலை நகரில் ஜாக்ட்டோ ஜியோவினர் விளக்ககூட்டம் நடத்துவோம்” என்றார் பாலு.

23ஆம் தேதி, நீதிமன்றத்தில் அவகாசம் கேட்பதற்கு அரசு சார்ப்பில் ஆலோசனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள் தலைமைச் செயலகம் வட்டாரத்தில். எந்த முடிவாக இருந்தாலும் 24ஆம் தேதி ஜாக்ட்டோ ஜியோவினர் கூடுவதற்கு, முன்னதாகவே அழைப்பு கொடுத்துள்ளார்கள்.

இயற்கைப் பேரிடர் காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டினால், தமிழக அரசு அதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் இப்போது பெரிய கேள்விக்குறி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top