புதிய பென்ஷன் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம்?

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே இருந்த பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலைவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

அரசுத்தரப்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், முழு அளவிலான உடன்பாடு ஏற்படாத நிலையில், ஓரளவு சுமூகப்பேச்சுவார்தை நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அந்த சங்கத்தின் உறுப்பினர்கள், தங்கள் அமைப்புக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து தங்களின் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தால் அரசாங்கப் பணிகளும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான பாடங்களும் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ‘அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதற்கும் ஏற்கெனவே இருந்த பென்ஷன் திட்டத்திற்கும் இடையே உள்ள சாதக, பாதகங்கள் என்னென்ன?’ என்பது குறித்து ஊழியர் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் விரிவாகப் பேசினோம்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவரும் ‘ஜாக்டோ ஜியோ’ கூட்டமைப்பின் உறுப்பினருமான பி.கே. இளமாறன், “2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் கிரேட் பே ஆகியவற்றின் அடிப்படையில் பத்து சதவிகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகையானது, ஓய்வூதியத்திற்காக, ஒவ்வொரு அரசு ஊழியரின் வைப்புநிதியில் வரவு வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவிகிதத் தொகை திருப்பிக் கொடுக்கப்படும். எஞ்சிய 40 சதவிகிதத் தொகையானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது முற்றிலும் அரசு ஊழியர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பறிக்கும்செயல். வைப்புநிதியில் இருந்து எங்களுக்கு எதற்கு ஓய்வூதியத் தொகை கொடுக்கவேண்டும்? மேலும் பங்குச்சந்தையில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையை முதலீடு செய்யும்போது, பங்குச்சந்தையின் அப்போதைய நிலவரம் எப்படி இருக்கும் என்று கணிக்கமுடியாது. எப்படி வேண்டுமானாலும் சந்தை இருக்கலாம். அப்படி இருக்கையில், இது அரசு ஊழியர்களுக்கு பாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் எதிர்காலத்தை இந்த அரசு சிதைக்க முயற்சி எடுத்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்றிய கடைசிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். அதாவது, ஒரு அரசு ஊழியர் பணியாற்றிய காலத்தில், அவர் ஓய்வு பெறும்போது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் இருந்து 50 சதவிகிதம் தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. மேலும், பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் பஞ்சப்படி உயர்வு போன்ற ஊதிய உயர்வு அறிவிப்புகள் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். .ஆனால், அப்படியான முறை புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இல்லை. அதனால்தான், புதிய பென்ஷன் திட்டம் வேண்டாம் என்று கூறி, அதனை எதிர்க்கிறோம்” என்றார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் பேசுகையில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், அரசு ஊழியர்களின் சம்பளத்தில், அவர்களின் வருங்கால வைப்பு நிதிக்காக பத்து சதவிகிதத் தொகை பிடித்தம் செய்யப்படும். விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள், வேண்டுமானால், கூடுதலான தொகையைக் கூட வைப்பு நிதிக்குச் செலுத்தலாம். அதுமட்டுமன்றி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததும், அவர்கள் செலுத்தியப் பணத்தில் இருந்து 60 சதவிகிதப் பணத்தை கடனாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதும், பழைய ஓய்வூதித்திட்டத்தில் சிறப்பம்சம். அவர்கள் பெற்றுக்கொள்ளும் இந்தக் கடன்தொகையை 30 மாத காலத்திற்குள் திருப்பிச் செலுத்திக் கொள்ளலாம். அதேபோன்று, ஐந்து ஆண்டுகள் பணி முடித்தவர்கள், தங்களது வைப்புநிதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 60 சதவிகிதத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று, ஊழியர்களின் பணிக்காலம் அதிகரிக்கும்பட்சத்தில், வைப்புநிதியை அவர்கள் எடுத்துப் பயன்படுத்தும் காலமும் அதிகரிக்கும்.

இதுபோன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பயன்படக்கூடிய வகையிலான அம்சங்கள் எதுவும் புதிய பென்ஷன் திட்டத்தில் இடம்பெறவில்லை. புதிய திட்டமானது, முற்றிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதகமாகவே உள்ளது. இதன் காரணமாகவே புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்க்கிறோம். சுருக்கமாகச் சொல்வதென்றால், பழைய ஒய்வூதியத் திட்டத்தின்கீழ் ஓய்வுபெறும் ஒரு ஊழியர் மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுகிறார் என்றால், அதே பதவியில் உள்ள ஒரு ஊழியர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பெறுவதோ வெறும் மூவாயிரம் ரூபாய் மட்டுமே. இதுபோன்ற பாதகங்கள் இருப்பதால்தான் முந்தைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கோருகிறோம்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top