புதிய பாடத் திட்டப் பணிகள் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும்

புதிய பாடத்திட்டப் பணிகள் வரும் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும் என கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் கல்வி முறையை மேம்படுத்தும் வகையில் உயர்நிலைக்குழுவும், கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவும் பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அமைக்கப்பட்டன. இதற்கான பணிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாடத்திட்டம் மற்றும் பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப்.14) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின்போது புதிய பாடத் திட்டம் தொடர்பாக இதுவரை என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்; மாணவர்கள் நலனுக்கான புதிய திட்டங்கள் குறித்து அந்தந்தக் குழுவினர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து சில யோசனைகளை வழங்கினார்.இது குறித்து கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், கலைத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் கால அட்டவணைப்படுத்தப்பட்டு ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருகின்றனர். ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டப் பணிகள் வரும் நவம்பர் இறுதி வாரத்தில் நிறைவு பெறும். இதைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டில் 1,6,9,11 வகுப்புகளுக்கான நூல்கள் புதிதாக வெளியிடப்படும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் பா.வளர்மதி, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் துணைவேந்தர்கள்இ.சுந்தரமூர்த்தி, இ.பாலகுருசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top