மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தள்ளிப் போன காரணத்தால், ஆகஸ்ட் முதல் நாள் தொடங்கப்பட வேண்டிய பி.இ. முதலாமாண்டு வகுப்புகள், ஆகஸ்ட் நான்காவது வாரத்தில்தான் தொடங்க வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை 20 அல்லது 21 ஆம் தேதியில் தொடங்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன், பி.இ. கலந்தாய்வு ஜூன் 27 }ஆம் தேதி தொடங்கி, ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்னதாக முடிக்கப்பட்டுவிடும்.
ஆனால், இம்முறை “நீட்’ தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு ஜூலை 17 }ஆம் தேதிதான் தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் சிறப்புப் பிரினருக்கும் அதன் பிறகு பொதுப் பிரினருக்கும் இரண்டு அல்லது மூன்று நாள்கள் சேர்க்கை நடைபெறும். அதன் பிறகே, பி.இ. கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது: எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 19 அல்லது 20 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். இதனால், பி.இ. கலந்தாய்வு ஜூலை 20 அல்லது 21 இல் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்தத் தேதிகளில் கலந்தாய்வு தொடங்கப்பட்டுவிட்டால், ஆகஸ்ட் 21 அல்லது ஆகஸ்ட் 23 ஆம் தேதியில் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுவிடும். இதற்கு சட்ட ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.