பிஇ, பிடெக் படிப்புகளுக்கான இடங்கள் அண்ணா பல்கலைக்கழகபொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவது போல பி.ஆர்க். எனப்படும் இளங்கலை கட்டிடக்கலை படிப்பில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அரசு ஒதுக்கீட்டில் 2,640 இடங்கள் உள்ளன. பி.ஆர்க். படிப்புக்கு பிளஸ் 2 கல்வித் தகுதியுடன் “நேட்டா” எனப்படும் கட்டிடக்கலை திறனறித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில், 2017-18-ம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள பி.ஆர்க். இடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் நேற்று அறிவித்துள்ளது. அகில இந்திய கட்டிடக்கலை கவுன்சில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு நடத்திய “நேட்டா” தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.annauniv.edu) பயன்படுத்தி ஜூலை 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை இந்துமதி அறிவித்துள்ளார்.