பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு

பி.ஆர்க்., ‘அட்மிஷன்’ விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதற்காக, அண்ணா பல்கலை பேராசிரியர், இந்துமதியை உறுப்பினர் செயலராக கொண்ட, மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி, ‘பி.ஆர்க்., இடங்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 25ல் துவங்கும்’ என, அறிவித்தது. ஆனால், இதற்காக அறிவிக்கப்பட்ட, barch.tnea.ac.in என்ற இணையதளம், முதல் நாளே செயல்படவில்லை.

மேலும், அட்மிஷன் குறித்த தகவல், அண்ணா பல்கலை மற்றும் தமிழ்நாடு இன்ஜி., மாணவர்சேர்க்கை கமிட்டி இணைய தளத்திலும் இடம் பெறவில்லை.எனவே, பி.ஆர்க்., விண்ணப்ப பதிவு அறிவிப்பு, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை இணையதளம் மற்றும் இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில், பி.ஆர்க்., பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பி.ஆர்க்., இணையதள தொழில்நுட்ப கோளாறும் சரி செய்யப்பட்டது.

இந்த இணையதளத்தில், மாணவர் சேர்க்கை விதிகள், கல்லுாரிகளின் பெயர் விபரங்கள், கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.பி.ஆர்க்., பதிவுக்கு, www.annauniv.edu, barch.tnea.ac.in மற்றும் www.tnea.ac.in என்ற இணையதளங்களிலும், மாணவர்கள் விபரங்களை பெறலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top