பிஎட் படிப்புக்கான விண்ணப்பம் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் 600-க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியில் கல்லூரிகளில் 1,777 இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன. அரசு ஒதுக்கீட்டில் உள்ள பிஎட் படிப்பில் 2017-2018-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கு கடந்த 21-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.சென்னையில் லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்உட்பட தமிழகம் முழுவதும் 13 கல்வியியல் கல்லூரிகளில் விண்ணப் பங்கள் வழங்கப்படுகின்றன.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி விண்ணப்பம் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. அவர்கள் சாதி சான்றிதழ் நகலை சுயசான்றொப்பமிட்டு சலுகை கட்டணத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங் களுடன் ஜூலை 3-ம் தேதிக்குள் (திங்கள் கிழமைக்குள்) ‘செயலர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை-2017, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக் கேணி, சென்னை 600 005’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.