பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா?- வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இன்றுடன் முடிகிறது

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய புதிதாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (30-ம் தேதி) முடிவடைகிறது.

தமிழகத்தில் 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாததால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். அவ்வப்போது ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு வழிகளில் போராட்டமும் நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில்கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார். இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளைப் பல்வேறு கட்டங்களாக அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடையும் தறுவாயில் அக்குழு 3 தடவை நீட்டிக்கப்பட்டது.இந்த சூழலில் வல்லுநர் குழுவின் தலைவரான சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்தஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி ஒரு குழுவை அமைத்தார். அந்த குழு நவம்பர் இறுதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என தமிழக அரசு ஆணையிட்டது.

இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அண்மையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது தங்களின் முக்கிய கோரிக்கை யாக பழைய ஓய்வூதிய திட்டத்தை முன்வைத்தனர். அப் போது அந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் பேசிய முதல்வர் கே.பழனிசாமி, வல்லுநர் குழு தனது அறிக்கையை நவம்பர் இறுதிக்குள் அரசிடம் சமர்ப்பித்துவிடும். அந்த அறிக்கையின் பேரில் இந்த விஷயத்தில் முடிவெடுப்பதாக நிர்வாகிகளிடம் உறுதியளித்தார். அந்த உறுதிமொழியை தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் ஒருபிரிவினர் தங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

இந்த நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, வல்லுநர் குழு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று (நவம்பர் 30) முடிவடை கிறது. டி.எஸ்.ஸ்ரீதர்தலைமையிலான வல்லுநர் குழு இதுவரையில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசவில்லை என்று சங்கங்களின் நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். வல்லுநர் குழு தனது அறிக்கையை காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்குமா? அல்லது அந்த குழுவுக்கு மேலும் காலஅவகாசம் அளிக்கப்படுமா? என்பது இன்று தெரியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top