பந்தாடப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு இல்லாததால் சறுக்கல்

ஊதிய உயர்வு இன்றி, பகுதி நேர ஆசிரியர்கள் பந்தாடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், 110வது விதியில் அறிவிக்கப்பட்டு, 2012ல், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, 13 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாதந் தோறும், 7,700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி, 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என, பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர், செந்தில்குமார், முதல்வர் பழனிசாமிக்கு மனு அளித்துள்ளார். அதில், ‘ஆண்டுதோறும், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, மே மாத சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதுவரை, 38 ஆயிரம் ரூபாய் வர வேண்டியுள்ளது; அதை, வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் உயர்த்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஆசிரியர்கள், ஸ்டிரைக் நேரத்தில், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து, நிலைமையை சமாளிக்கின்றனர். ‘ஆனாலும், பகுதி நேர ஆசிரியர்களை அரசு கண்டு கொள்ளாததால், ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில், கலை ஆசிரியர்களும், பகுதி நேர ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். இதனால், பகுதி நேர ஆசிரியர்களை பல சங்கத்தினரும், அரசும் பந்தாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top