நீதிமன்ற ஊழியர்களும் இன்று முதல் ஸ்டிரைக்

தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து தங்களது ஆலோசனைகளை கூறினர்.

கூட்டத்தின் முடிவில் மாநில தலைவர் கருணாகரன், மாநில பொது செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று நடந்த அவசர மாநில செயற்குழு கூட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 8வது ஓய்வூதியக்குழு பரிந்துரையை ஏற்று உடனடியாக 20 சதவீதம் இடைக்கால நிவாரணத்துடன் வழங்குவதாக அறிவிக்க வேண்டும்.

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள நீதித்துறை ஊழியர் சங்கமும் பங்கேற்க முடிவு செய்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரம் நீதித்துறை ஊழியர் இந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பார்கள். இதுவரையிலும் நீதித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் எங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை இனி வரும் நாளில் எங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top