நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்கநிர்வாகிகள்

உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, நீதிபதி கிருபாகரன் கண்டித்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில், நீதிபதியை விமர்சித்து, செய்திகள் வந்தன. ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சிலரும், நீதிபதியை விமர்சித்தனர். இவ்வாறு விமர்சிப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, வழக்கறிஞர்கள், செந்தில்குமார், சூரியபிரகாசம் உள்ளிட்டோர் முறையிட்டனர்.

இந்த வழக்கு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நீதிமன்றத்தில், நிர்வாகிகள் ஆஜராகும்படி, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று சங்க முன்னாள் தலைவர், மாயவன், தலைவர், பக்தவத்சலம், பொதுச்செயலர், கோவிந்தன், முன்னாள் பொருளாளர், சொர்ணலதா ஆகியோர் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். ‘நீதிமன்றத்தை அவதுாறு செய்யும் நோக்கம் இல்லை’ எனவும், அவர்கள் தெரிவித்தனர்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, கூடுதல் அட்வகேட் – ஜெனரல், வெங்கட்ரமணி தெரிவித்தார். ‘தற்போதைய நிலையில், இந்த வழக்கை முடிக்கக் கூடாது’ என, வழக்கறிஞர், செந்தில்குமார் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ‘அவசரப்பட்டு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை’ எனக் கூறிய, நீதிபதி கிருபாகரன், விசாரணையை, டிச., ௬க்கு தள்ளிவைத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top