நல்ல சம்பளம் கிடைத்தும் போராட்டம் நடத்துவதா; மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன்

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களால் மாணவர் சமுதாயம்தான் பாதிக்கப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு உடனடியாக கவுன்சிலிங் மையத்தை அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நாளை இன்னொரு வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதி கிருபாகரன் ஆசிரியர் போராட்டம் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
அப்போது நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். போராடும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிலை பற்றி கவலை கொள்வதில்லை என்று தெரிவித்தார்.
கல்வி முறையை தன் கைக்குள் வைத்திருப்பது ஆசிரியர்கள்தான்.. அவ்வாறு தன் கைகளில் கல்வி முறையை வைத்துள்ள ஆசிரியர்கள் நடத்தும் போராட்டங்களால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அரசுப்பள்ளிகளில் பயின்ற 5 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது என்பது ஆசிரியர்களுக்கு அவமானம் என்று தெரிவித்தார்.

நல்லாசிரியர்களும் பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் சாதாரண பள்ளியில்தான் படித்தேன் எனக்கு தங்கமான ஆசிரியர்கள் கிடைத்தார்கள். ஆனால் சங்கம் அமைத்து செயல்படும் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுபவர்களால் மாணவர்களுக்குத்தான் பாதிப்பு என்று கண்டனம் தெரிவித்தார்.

விருத்தாசலம் அருகே ஒரு ஊரில் ஆசிரியர் ஒருவர் மூன்று மாதம் பள்ளிக்கு விடுப்பு போட்டு சென்றுவிட்டார். இதனால் பிள்ளைகள் படிப்பு பாதிக்கப்பட்டதாக பள்ளியை இழுத்து மூடிய பெற்றோர் பின்னர் ஆசிரியரை திருப்பி அனுப்பியதையும், இதை பின்னர் கேள்விப்பட்ட அரசு அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ததையும் தனியார் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

ஆசிரியர் சங்கத்தினர் தங்கள் சங்கத்தில் இருப்பவர்கள் தவறே செய்யவில்லை என்று கூற முடியுமா? பொது நல நோக்கோடு நாங்கள் கருத்து தெரிவிக்கும் போது அதையும் வெளியில் விமர்சிக்கிறார்கள், அது நீதிமன்ற அவமதிப்பாகும். அவ்வாறு செயல்படுபவர்கள் மீண்டும் நீதிமன்றத்தைத்தான் நாடி வரும் நிலை ஏற்படும்.
சங்கம் அமைத்து தலைவர்களாக இருப்பபவர்கள் தங்களுக்கு உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். மருத்துவம், காவல் துறை, கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.

போராட்டத்தை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள் நாளை ஆளுங்கட்சியாக வரும்போது அதை எதிர்ப்பார்கள். இதெல்லாம் அரசியல். போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் தொழிலாளர்களா? நல்ல சம்பளம் கிடைத்தும் இது போன்ற போராட்டங்களை நடத்துபவர்கள் மாணவர்கள் நலனைப் பற்றி கவலைப்படுவதில்லை. மயிலே மயிலே என்றால் இறகுகள் விழாது, அரசுதான் போராட்டத்தை ஒடுக்க வேண்டும்.

கல்வித்துறையை மேம்படுத்துவதில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. வரும் 18-ம் தேதி போராட்டம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதி கிருபாகரன் வழக்கை ஒத்திவைத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top