தொடக்க கல்விக்கு ஆசிரியர் பயிற்சி விவகாரம் : வரும் 30-ம் தேதியுடன் முடியும் காலக்கெடுவை நீடிக்க கோரிக்கை

ஆசிரியர் பயிற்சிக்கான காலக்கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டம் 2009-ன் படி மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தனியார் பள்ளிகள் தகுதி இல்லாத ஆசிரியர்களை பணியில் நியமித்திருப்பதை மத்திய அரசு வரன்முறைபடுத்த முடிவு செய்துள்ளது. தொடக்க கல்விக்கான 2 ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பை முடிக்காதவர்கள் பணி செய்து கொண்டே, தேசிய திறந்த நிலை பள்ளியில் சேர்ந்து உரிய தகுதியை அடைய வேண்டும் என மத்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் இந்த நடவடிக்கையை தனியார் பள்ளி நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

அதே நேரத்தில் ஆசிரியர் பயிற்சிக்கான காலக்கெடு வரும் 30-ம் தேதி என்பதை மேலும் நீடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 20,000 தனியார் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

இதில் ஆசிரியர் பயிற்சி முடிக்காத 2 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணிபுரிவது தெரிய வந்துள்ளது. இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப்படிப்பை முடிக்காவிட்டால், தங்களது பணியை அவர்கள் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இதுவரையில் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 3-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இதற்கு முதல் வருடத்திற்கு ரூ.4,500-ம், 2-வது வருடத்திற்கு ரூ.6,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதியான ஆசிரியர்கள் மூலம் தான் கல்வி கற்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top