தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை 2017-2018 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள்

தமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை 2017-2018 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் : (அங்கன்வாடி & சத்துணவு)

54,439 அங்கன்வாடி மையங்களுக்கு ரூபாய் 1 கோடியே 40 இலட்சம் செலவில் சுகாதார பைகள் (Hygiene Kits) வழங்கப்படும்.

அங்கன்வாடி மையங்களில் உள்ள முன்பருவக் கல்வி கற்கும் குழந்தைகளிடையே சுவாசத்தொற்று மற்றும் வயிற்று உபாதைகள் பரவாமலும் அவை மற்ற குழந்தைகளுக்கு எளிதில் தொற்றாமலும் இருக்க தன் சுத்தத்தை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மற்றும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பது முக்கியமான தேவையாகும்.

அங்கன்வாடி மையக் குழந்தைகளிடையே தன் சுத்தம் பேணுதலை ஊக்குவிக்கும் முகமாக, மையம் ஒன்றிற்கு ரூபாய் 244 செலவினத்தில் கைத்துண்டு, குழந்தைகளுக்கான நக வெட்டி, சீப்பு, சோப்பு மற்றும் இவற்றை வைக்கும் பை ஆகியன கொண்ட சுகாதாரப் பையினை அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 1 கோடியே 40 இலட்சம் செலவில் அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதாரப் பைகள் வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 24.10 இலட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

19,230 சத்துணவு மையங்களுக்கு உயர் அழுத்த அடுகலன்கள் (Pressure Cooker) மற்றும் 12,000 சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் ரூபாய் 10 கோடியே 80 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

தற்போது பள்ளி சத்துணவு மையங்கள் சீரமைக்கப்பட்டு, வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டடம் மற்றும் எரிவாயு இணைப்பு போன்றவைகள் பொருத்தி சத்துணவு மையங்கள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளதால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிவாயு செலவினைக் குறைப்பதற்கும், குறுகிய காலத்தில் சுகாதாரமான முறையில் காய்கறி, மற்றும் பருப்பு வகைகள் சமைக்க 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய அலுமினிய பிரஷர் குக்கர் வாங்கி வழங்க அரசு உத்தேசித்துள்ளது.

ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு சுழற்சி அடிப்படையில் ரூபாய் 5,000க்கு சமையல் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட அலுமினிய குக்கர் 19,230 சத்துணவு மையங்களுக்கு ரூபாய் 4 கோடியே 80 இலட்சம் செலவிலும், புதிய சமையல் உபகரணங்கள் தலா ரூபாய் 5,000 வீதம் 12,000 சத்துணவு மையங்களுக்கு ரூபாய் 6 கோடி செலவிலும் ஆக மொத்தம் ரூபாய் 10 கோடியே 80 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top