“அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,” என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., – அரசு: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட, பவுஞ்சூரில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு,புதிய கட்டடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் செங்கோட்டையன்: அரசின் பரிசீலனையில் இல்லை.
அரசு: பவுஞ்சூர் மற்றும் சித்தாமூரில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலக கட்டடம், மிகவும் பழுதடைந்துள்ளது; சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: அரசு அலுவலக கட்டடங்கள் காலி இருந்தால், அங்கு மாற்றப்படும். இடம்இல்லையெனில், புதிய கட்டடம் கட்ட, நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., – ரகுபதி: தனியார் பள்ளிகளில்,ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில், இடம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி கட்டணத்தை மட்டும், அரசு வழங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்குவழங்கப்படும், இலவச பொருட்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை; அதை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் செங்கோட்டையன்: அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு இன்னமும் நிதி வழங்கவில்லை. எனினும், மாநில அரசு, 176 கோடி ரூபாய் ஒதுக்கி, கல்விக் கட்டணம் வழங்கி உள்ளது.இலவசப் பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை.
தி.மு.க., – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. ஒரு மாணவனுக்கு, இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலை உள்ளது. இப்பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் செங்கோட்டையன்: நீங்கள் கூறியது,அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள், கிராமம் கிராமமாகச் சென்று, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாது. இந்தியாவே திரும்பி பார்க்கும் விதமாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.