கோட்டை ஊழியர்கள் 2 மணி நேரம், ‘ஸ்டிரைக்’

‘ஜாக்டோ – ஜியோ’ அமைப்புக்கு ஆதரவாக, தலைமை செயலக ஊழியர்கள், நேற்று காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு பின், போராட்டத்தை கைவிட்டனர்.

சென்னையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, தலைமை செயலக ஊழியர்கள், கோட்டை வளாகத்தில் உள்ள, நாமக்கல் மாளிகை முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தை துவக்கினர். போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூற, இரு தரப்பினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, போலீசார் பின்வாங்கினர். தலைமை செயலக சங்க இணை செயலர், ஹரிசுந்தர் உட்பட பலர், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பகல், 12:00 மணிக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவை ஏற்று, ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உறுதி அளித்தனர். அந்த தகவல் கிடைத்ததும், செப்., 21 வரை, போராட்டம் ஒத்திவைக்கப் படுவதாக, தலைமை செயலக ஊழியர்களும் அறிவித்தனர்; பின், உடனடியாக, பணிக்கு திரும்பினர். ஆனால், அலுவலகத்தில், காலை பணிக்கு வந்ததுபோல் கையெழுத்திட, அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், அவர்கள், தாமதமாக வந்ததாகக் கூறி, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். தலைமை செயலக ஊழியர் சங்க தலைவர், கணேசன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஆனால், செயலர் மற்றும் இணை செயலர் பங்கேற்றனர். இது குறித்து, சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், தலைவரையும் சமாதானப் படுத்தி, அடுத்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வைப்போம்’ என்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top