கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருத வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.சம்பத்குமார்.இவர்,சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் விவசாயகுடும்பத்தை சேர்ந்தவன். பிளஸ்–2 தேர்வில் 95.75 சதவீத மதிப்பெண்பெற்றேன்.

பிளஸ்–2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வில் பெற்றமதிப்பெண் அடிப்படையில் மும்பையில் உள்ள மருத்துவகல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க கடந்த ஆண்டு இடம்கிடைத்தது.இதைதொடர்ந்து எனது குடும்பத்துக்கு சொந்தமான விவசாயநிலங்களை ஈடாக வைத்து ரூ.25 லட்சம் கல்விக்கடன் வழங்கும்படி விழுப்புரம் மாவட்டம் முகையூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விண்ணப்பித்தேன்.விவசாய நிலங்களை ஈடாக பெற்றுக்கொண்டு கல்விக்கடன் வழங்க முடியாது என்று கூறி கடந்த 24.6.2016 அன்று எனது விண்ணப்பத்தை நிராகரித்து வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்யநாராயணா விசாரித்தார்.

முடிவில், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி உள்ள மாணவர்கள் உயர் கல்வியை தடையின்றி தொடர வேண்டும் என்பதற்காக கல்விக்கடன் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மனுதாரர் தனது முயற்சியால் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுமருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.விவசாய நிலங்களை ஈடாக பெற்றுக்கொண்டு கல்விக்கடன் வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் ஒருபோதும் மறுக்க முடியாது. கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருதி வங்கி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.

விவசாய நிலங்களை ஈடாக பெற்றுக்கொண்டு கல்விக்கடன் வழங்க முடியாது என்ற வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.மனுதாரரிடம் இருந்து விவசாய நிலங்களுக்கான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவர் கோரிய ரூ.25 லட்சம் கல்விக்கடனை 4 வாரத்துக்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top