கணினி அறிவியலில் தேர்ச்சி பெற்று பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது – அமைச்சர் செங்கோட்டையன்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி (அரக்கோணம்), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சு.ரமேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறையில் தமிழக அரசு செய்துள்ள பல்வேறு மாற்றங்கள் காரணமாக கல்வியில் மாணவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் நிலை உருவாகும். கல்வியில் செய்துள்ள மாற்றத்தால் அரசு பள்ளியில் இடம் கிடைக்காமல் போகும் நிலை வரும் காலங்களில் ஏற்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கணினி அறிவியலில் தேர்ச்சி பெற்று பி.எட்., பட்டம் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்வித்துறையில் செய்துள்ள மாற்றத்தால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top