ஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப்போராட்ட வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜரானார்.

ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான தேதியை அக்.13- ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, 7- ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ-ஜியோ) செப்.7-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த டி.சேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், நீதிமன்ற தடையை மீறி ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டமைப்பு,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து போராட்டத்தை கைவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடுவோம் என்று தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் போராட்டத்தை தாற்காலிகமாக நிறுத்திக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் செப்.21 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை செப்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார்.

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், தாஸ், மோசஸ், எம்.சுப்பிரமணியம் ஆகியோரும் ஆஜராகினர். ஜாக்டோ ஜியோ தரப்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஜி.பிரசாத் வாதிட்டார். அவர், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைஅறிக்கை அரசிடம் இதுவரைத் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்ய காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கோரிக்கைள் குறித்து அரசுக்கு ஓராண்டாக தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் வலியுறுத்தியும் பலன் இல்லாததால் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர் என்றார்.இதைத்தொடர்ந்து அரசுத் தலைமை வழக்குரைஞர் விஜய நாராயணன் வாதிட்டார். அவர், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை வரும் 30-ஆம் தேதி சமர்ப்பிக்க உள்ளது. அறிக்கையை தாக்கல் செய்த பிறகே அவற்றை பரிசீலித்து ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த முடியும். இதற்கு சில மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும். ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு அறிக்கையை பொருத்தவரையில், ஓய்வூதியம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட வேண்டியுள்ளது.

எனவே அதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பொருத்தவரையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கூடுதலாக ஊதியம் வழங்கப்படுகிறது. பல மாநிலங்களில் அதிகபட்சமாக அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3 ஆயிரம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் குறைந்தபட்சமாக ரூ.7,600-ம், அதிகபட்சமாக ரூ.10,700 வரையும் வழங்கப்படுகிறது. மேலும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் பகுதி நேரம் மட்டுமே பணிபுரிகின்றனர். எனவே அவர்களை முழுநேர அரசு ஊழியர்களாக கருத முடியாதுஎன்று வாதிட்டார்.அப்போது மூத்த வழக்குரைஞர் என்.ஜி.பிரசாத், சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் இறுதி மாத ஊதியத்தில் 50 சதவீத தொகை மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் குடும்ப ஓய்வூதியம், மாதாந்திர ஓய்வூதியம் போன்ற எந்த பலன்களும் இல்லை. எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கிறோம் என்றார். அப்போது நீதிபதிகள், வரும் 30-ஆம் தேதிக்குள் ஊதியக்குழுவின் அறிக்கையை அரசுக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின்னர் அந்த பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாகவும், இடைக்கால நிவாரணம் தொடர்பாகவும் முடிவு செய்யலாம் என்றனர்.அதை ஜாக்டோ- ஜியோ தரப்பினர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஒவ்வொரு முறையும் அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் செய்து கொண்டே வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பரிந்துரையை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்து பேசி முடிவை பிற்பகலில் தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.ஊதிய பிடித்தம், ஒழுங்கு நடவடிக்கை கூடாது: பின்னர் அந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மீண்டும் இரதரப்பிலும் வாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான அறிக்கையை செப்.30-ஆம் தேதிக்குள் அரசுக்குத் தாக்கல் செய்ய வேண்டும். ஊதியக்குழு பரிந்துரையை எப்போது நிறைவேற்ற முடியும் என்பதை அரசு அக்டோபர் 13-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

இதில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. மேலும் போராட்ட நாள்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்ட நாள்களை அரசு ஊழியர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றி ஈடுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக். 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top