உயர் சாதி மாணவர்களுக்கு 50.5 % இட ஒதுக்கீடா?..! மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் மீண்டும் சர்ச்சை!

மருத்துவ மாணவச் சேர்க்கையில் இட ஒதுக்கீடு மாணவர்கள், இட ஒதுக்கீடு இல்லாத மாணவர்கள் என்று பிரித்து வகைப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் சி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு முடிவுகள் பெரும்பாலும் எதிர்மறையாகவே அமைந்திருந்தது. இந்திய அளவில் முதல் 25 இடங்களில் ஒரு இடங்களைக் கூட தமிழக மாணவர்கள் பெற முடியாமல் போனது. நீட் தேர்வால், இந்த முறை அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப் புற மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையில் இட ஒதுக்கீடு தொடர்பாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் சி.கே.மிஸ்ரா தனியார் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ‘இந்த முறை மருத்துவ மாணவச் சேர்க்கையில் இட ஒதுக்கீடு மாணவர்கள் மற்றும் இட ஒதுக்கீடு இல்லாத மாணவர்கள் என்று பிரிக்கப்படும். மத்திய அரசுக்கான 15 சதவீத இடத்தில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்களுக்கு 49.5 சதவீதமும், ஓ.சி பிரிவு மற்றும் கிரிமி லேயர் பிரிவில் வரும் மாணவர்களுக்கு 50.5 சதவீதமும் ஒதுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். அதன்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரும் மாணவர்கள், ஓ.சி பிரிவில் வரும் மாணவர்களை விட அதிக மதிப்பெண் எடுத்திருக்கும்பட்சத்திலும், அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் 50.5 சதவீத இடத்தில் சேர முடியாது.

இதற்கான செயல் திட்டம் முன்னதாகவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு சமயத்திலேயே, கிரிமி லேயரில் வரும் மாணவர்களும், ஓ.சி பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இட ஒதுக்கீடு இல்லாத பிரிவைச் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த முறை ஓ.சி பிரிவில் வரும் மாணவர்களுக்கு பொதுவான நீட் தேர்வு ரேங்கை தவிர்த்து இடஒதுக்கீடு இல்லாத பிரிவிற்கான ரேங்க்கும் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவு, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top