அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க 146 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

தனியார் மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு முடித்த, 146 மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை, 10 க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை அடுத்த, ஸ்ரீபெரும்புதுார் அருகில், பென்னலுாரில், அன்னை மருத்துவக் கல்லுாரிஉள்ளது.இங்கு, முதலாம் ஆண்டு படிப்பை முடித்த, 146 மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, ‘நீட்’ தேர்வு அடிப்படையில், நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். மாணவர்கள் சேர்க்கைக்கான ஒப்புதலை, மருத்துவ கவுன்சில் வழங்கி உள்ளது.தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தில், ‘மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாவிட்டால், புதிதாக சேர்க்கை நிறுத்தப்படும்.’ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான பொறுப்பை, மாநில அரசு எடுத்து கொள்ளும்’ என, கூறப்பட்டுள்ளது.நாங்கள், முதலாம் ஆண்டு பூர்த்தி செய்து விட்டோம். இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, நாங்கள் செலுத்த வேண்டும். இந்நிலையில், மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, கல்லுாரி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என்பதால், இரு ஆண்டுகளுக்கு, மாணவர்கள் சேர்க்கையை நடத்தக் கூடாது என, மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தற்போது, கல்லுாரியின் மருத்துவமனை மூடப்பட்டு விட்டது; அங்கு, ஊழியர்கள் இல்லை. கல்லுாரியில் இருந்தும், ஊழியர்கள் பலர் விலகி விட்டனர்.கல்லுாரியை நடத்தும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இடையே, பிரச்னைகள் உள்ளன. எனவே, மாநில அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மத்திய அரசின் அனுமதியுடன், மாணவர்களாகிய எங்களுக்குரிய பொறுப்பை, அரசு எடுத்து கொள்ள வேண்டும்.எங்களை, அரசு மருத்துவக் கல்லுாரிளுக்கு மாற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டை தொடர, இடைக்கால உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்கள், நீதிபதி, கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தன. மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், சிராஜுதீன் உள்ளிட்ட, வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையை, ௧௦க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top