அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

‘தமிழக அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை வகுப்பறைகள் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும்; 3,000 பள்ளிகளில், ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறைகள் துவங்கப்படும்,” என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கோவை, சி.எஸ்.ஐ., திருமண்டலம் கூட்டு கல்விக்குழு சார்பில், முப்பெரும் விழா நடந்தது. இதில், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:தொடர்ந்து, மூன்று பொதுத்தேர்வுகளை எழுதினால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதா என்கின்றனர். மன அழுத்தம் குறைக்க, தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும். அவர்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை.பிளஸ் 1ல் தோல்வி அடைந்தாலும், பிளஸ் 2வில், ஜூன் மாதம் தேர்வு எழுதலாம் என்ற திட்டத்தை, இந்த அரசு உருவாக்கியுள்ளது.மத்திய அரசின்பொதுத் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு, பாடத்திட்டங்களை மாற்றியமைக்க ஆலோசித்து வருகிறோம்.அதற்கேற்ப, மாணவர்களுக்கு அளிக்கும் பாடத்திட்டங்கள்,54 ஆயிரம் வினா – விடை மற்றும் வரைபடம் கொண்டதாக இருக்கும். கல்வித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவுள்ளோம்.சட்டசபையில் இதற்காக, 41 திட்டங்களை அறிவித்துள்ளோம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வி முறைகளை ஒப்பிட்டு, மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தஉள்ளோம். நம் தொன்மை, கலாசாரம், பண்பாடுகளை கட்டிக்காக்கும் வகையில், யோகா, தேசபக்தி, விளையாட்டு ஆகியவற்றை பள்ளிகளில் மேம்படுத்தும் திட்டங்கள் வரவுள்ளன.அரசு பள்ளிகள் அனைத்தும் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும். 3,000 பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பாடங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்; கல்வித்தரம் மேம்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

பின் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:’நீட்’ தேர்வை பொறுத்தவரை, தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதே, நம் அரசின் நிலைப்பாடு. அதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதில் தெளிவாக இருக்கிறோம்.மழலையர் பள்ளிகளில் சிறந்த பயிற்சி அளிக்கப்படும். 3,000 மாற்று ஆசிரியர்கள் நியமனம் குறித்து, நாளை மறுதினத்துக்குள்ஆணை பிறப்பிக்கப்படும்.

பின் டெண்டர் விடப்படும். பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம், 7,500 ரூபாயாக அதிகரிக்கப்படும்.தனியார் பள்ளிகள் கட்டண பிரச்னையை பொறுத்தவரை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின், இவ்வளவுதான் கட்டணம் என, நிர்ணயிக்கப் போகிறோம். உயர் நீதிமன்ற நீதிபதியின் பரிந்துரையின்படி நடப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top