அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அதுவரையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் : பள்ளிக் கல்வி அமைச்சர்

2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வு; ஒரே மாதத்தில் முடிவு வெளியிடப்படும்: பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அரசு பள்ளிகளில் 2 மாதத்தில் கணினி ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

தேர்வுமுடிவுகள் ஒரே மாதத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-2315 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பணியானது வெறும் 40 நாளில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு எவ்வளவு வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு கல்வித்துறையில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறோம்.மாணவர்கள், பள்ளிகள் இடையே தேவையற்ற வேறுபாட்டு உணர்வை ஏற்படுத்தக்கூடிய பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ரேங்க் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் எழுதிய 19 லட்சம் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ்மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பினோம்.தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இந்த மாத இறுதியில் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளுக்கு கணினிஆசிரியர்கள் (748 காலியிடங்கள்) 2 மாதத்தில் தேர்வுசெய்யப்பட உள்ளனர். அதற்காக நடத்தப்படும் தேர்வின் முடிவு ஒரே மாதத்தில் வெளியிடப்பட்டும். மேலும் கற்றல்குறைபாடு உடைய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, “அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். அதுவரையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்.
நீட் போன்ற தேர்வுகளுக்கான இலவச பயிற்சியானது வெளிமாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மூலம் அளிக்கப்படும். இதற்கான சிறப்பு நிகழ்ச்சி அண்ணா நூலகத்தில் நடைபெறும். மேலும், மாணவர்களின் திறனை வளர்ப்பதற்காக பள்ளிகளில் இந்த மாத இறுதியில் யோகா வகுப்புகள் தொடங்கப்படும்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top